Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

pinarayi vijayanமுதலாளித்துவ ஓட்டுக்கட்சிகளைப் போல சி.பி.எம் கட்சியும் ஊழலில் சிக்கிச் சீரழிந்து நிற்கிறது. கொள்கை சித்தாந்தம் அனைத்தையும் கை கழுவிவிட்டு, தனியார்மயம் தாராளமயத்துக்குக் காவடி தூக்கி, சிங்கூர் நந்திகிராமத்தில் போராடும் மக்களை மிருகத்தனமாக ஒடுக்கிய சி.பி.எம். கட்சி, இப்போது லாவலின் ஊழல் விவகாரத்தால் எஞ்சியிருந்த ஒட்டுக் கோவணத்தையும் இழந்து அம்மணமாகி நிற்கிறது.

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைக்குழு உறுப்பினரும், கேரள மாநிலச் செயலாளருமான பினாரயி விஜயன் மீது, ரூ. 390 கோடி லாவலின் ஊழல் வழக்கில் மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், ஊழல் கறை படியாத கட்சி என்ற மாயபிம்பத்தையும் அது தகர்த்தெறிந்து விட்டது.

ஒவ்வொரு முறையும் சர்ச்சைக்குரிய வழக்குகள் வரும்போதெல்லாம், “”மையப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேணடும்” என்று கூப்பாடு போட்டு வந்த சி.பி.எம். கட்சி, இப்போது “”தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக மைய அரசு பயன்படுத்தும் இன்னொரு ஆயுதம்தான் சி.பி.ஐ.” என்று புதிய விளக்கம் கொடுக்கிறது. அக்கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் மீது ஊழல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான், இந்தத் திடீர் “”பல்டி”க்குக் காரணம்.

“1996 முதல் 2001 வரை கேரளாவில் முதல்வர் ஈ.கே. நாயனார் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில், பினாரயி விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துடன் மூன்று நீர்மின் திட்டங்களுக்கான ஒப்பந்தம் போட்டார். இதில் ஊழல் நடந்துள்ளதாகக் கேரள காங்கிரசார் குற்றம் சாட்டி 2001 முதல் 2006 வரையிலான தமது ஆட்சிக் காலத்தில் ஒரு கமிட்டியை நிறுவி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் எதிர்பார்த்தபடி எந்த ஊழல் முறைகேட்டையும் கண்டறிய முடியவில்லை. தமது ஆட்சியின் கடைசி நேரத்தில் அதாவது, 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அன்றைய காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டி இந்த ஊழலை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்கக் கோரி நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் சட்டமன்றத் தேர்தலில் சி.பி.எம். கட்சியை ஊழல் கறை படிந்ததாகக் காட்டி ஆதாயமடைய காங்கிரசு முயற்சித்தது.
pv2

ஆனால், 2006இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கேரள மக்கள், காங்கிரசைத் தோற்கடித்து இடது முன்னணியை வெற்றி பெறச் செய்தனர். காங்கிரசின் அவதூறுக்கு பதிலடி கொடுத்து மக்கள் தீர்ப்பளித்த போதிலும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், மைய அரசின் அதிகாரத்தைக் கொண்டு மீண்டும் இந்த வழக்கைக் கிளறி ஆதாயமடையத் துடிக்கிறது, காங்கிரசு. எனவேதான், இந்த ஊழல் வழக்கும் மையப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கையும் அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று நியாயவாதங்களை அடுக்குகிறது, சி.பி.எம். தலைமை.

ஆனால், ஒப்பந்தப்படி லாவலின் நிறுவனம் செயல்படாததால் மாநில அரசும் மின் வாரியமும் ரூ. 390 கோடி நட்டமடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறது, மையப் புலனாய்வுத் துறை. ஒப்பந்தத்தில், மலபாரிலுள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ. 98 கோடி நிதியுதவி செய்வதாக லாவலின் நிறுவனம் வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், அந்நிறுவனம் ரூ. 8.98 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. எஞ்சிய தொகை இதுவரை தரப்படவில்லை. பினாரயி விஜயன் கனடா நாட்டுக்குச் சென்றபோதிலும், லாவலின் நிறுவனத்திடமிருந்து அத்தொகையைப் பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

லாவலின் நிறுவனம் அத்தொகையை வழங்கியிருக்கக் கூடும் என்றும், அத்தொகையை பினாரயி விஜயனும் சி.பி.எம். கட்சித் தலைமையும் அமுக்கி விட்டனர் என்றும் காங்கிரசு குற்றம் சாட்டுகிறது. லாவலின் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில், இத்தொகை பற்றி வெறும் வாக்குறுதியாக மட்டுமே உள்ளதே தவிர, தனியாக ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை. மேலும், அப்போது மின்துறை அமைச்சராக இருந்த பினாரயி விஜயன், புற்றுநோய் மருத்துவமனைக்கான லாவலின் நிறுவனத்தின் நிதியுதவி பற்றி அமைச்சரவைக்குத் தெரிவிக்கவில்லை.

மையப் புலனாய்வுத் துறை மற்றும் காங்கிரசுக் கட்சியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பினாரயி விஜயனோ, சி.பி.எம். கட்சித் தலைமையோ இன்றுவரை விளக்கமளிக்கவில்லை. இவை அரசியல் உள்நோக்கமுடைய அவதூறுகள் என்று சி.பி.எம். கட்சித் தலைமை புறக்கணித்து வருகிறது. அவற்றை மட்டுமல்ல் சி.பி.எம். கட்சித் தோழர்களே ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதாக சந்தேகங்களை எழுப்பிய போதிலும், அவற்றை சி.பி.எம். கட்சித் தலைமை மூடிமறைத்து வருகிறது.

கேரள மாநில அரசின் கணக்கு தணிக்கைத்துறை அதிகாரியின் அலுவலகம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாநில அரசுக்கு ரூ. 390 கோடி நட்டமேற்பட்டுள்ளதாக தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவரான பாலானந்தன் தலைமையில் நிறுவப்பட்ட கமிட்டியானது, மூன்று மின் திட்டங்களைப் புதுப்பித்து நவீனப்படுத்த அரசுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்துடன் (“”பெல்”) ஒப்பந்தம் போடுமாறும், அன்னிய தனியார் நிறுவனமான லாவலினைப் புறக்கணிக்குமாறும் பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும் இப்பரிந்துரைக்கு மாறாக பினாரயி விஜயன், லாவலின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். மேலும், கேரள மாநில அரசின் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை, எட்டு உயரதிகாரிகள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவரங்களை இணைத்து 302 பக்க அறிக்கையாக கேரள சி.பி.எம். முதல்வரும் பினாரயி விஜயனுக்கு எதிரான கோஷ்டியின் தலைவருமான அச்சுதானந்தன், ஏற்கெனவே கட்சித் தலைமையிடம் புகாராகக் கொடுத்துள்ளார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான அச்சுதானந்தன் கொடுத்த இப்புகார் பற்றி கட்சிக்குள் கூட சி.பி.எம். தலைமை விசாரணை நடத்த முன்வரவில்லை.

<img

தற்போது பினாரயி விஜயன் மீது மையப் புலனாய்வுத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததும், உடனடியாக விமானமேறி டெல்லிக்குச் சென்று சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளரான பிரகாஷ் காரத்தை அச்சுதானந்தன் சந்தித்தார். முதன்முறையாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஒருவர் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால், வரும் பொதுத்தேர்தலில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும், உடனடியாக கேரள மாநிலச் செயலர் பதவியிலிருந்து பினாரயி விஜயனை நீக்குமாறும் கோரியுள்ளார்.

மையப் புலனாய்வுத்துறையும் காங்கிரசும் அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு செய்கின்றன என்றால், கேரள முதல்வரும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான அச்சுதானந்தன், பினாரயி விஜயன் மீது புகார் கொடுப்பதிருப்பதும் கூட வெறும் அவதூறுதானா என்று சி.பி.எம். கட்சிக்குள் கேள்விகள் எழத்தொடங்கின. ஏற்கெனவே பினாரயி விஜயன் கோஷ்டிக்கும் அச்சுதானந்தன் கோஷ்டிக்கும் இடையிலான நாய்ச் சண்டையால் கேரள சி.பி.எம். கட்சியே பிளவுபட்டுக் கிடக்கும் நிலையில், விஜயன் மீது நடவடிக்கை எடுத்தால் கேரளாவில் கட்சியே உடைந்து சிதறி விடும் என்று சி.பி.எம். தலைமை அஞ்சியது.
மறுபுறம், மாநில ஆளுநரின் அனுமதி பெற்று மையப் புலனாய்வுத் துறை விஜயன் மீது விசாரணை நடத்த முற்பட்டால், சட்டப்படி இவ்வழக்கில் மாநில அரசின் நிலை பற்றி அமைச்சரவையில் விவாதிக்க நேரிடும். அப்போது முதல்வர் அச்சுதானந்தன், பினாரயி விஜயனைப் பழிவாங்க நடவடிக்கை எடுத்தால், அது கட்சிப் பிளவைத் தீவிரமாக்கி விடும் என்றும் கட்சித் தலைமை அஞ்சுகிறது. அல்லது, அச்சுதானந்தனை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு இந்தச் சிக்கலிலிருந்து மீள கட்சித் தலைமை முயற்சித்தாலும், அச்சுதானந்தன் கோஷ்டி கலகத்தில் இறங்கி கட்சியைச் சிதறடித்துவிடும்.

என்ன செய்வதென்று புரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்ட சி.பி.எம். தலைமை, பிப்ரவரி 14ஆம் தேதியன்று அரசியல் தலைமைக்குழு கூட்டத்தைக் கூட்டி, விஜயனை ஆதரித்து, கட்சியைக் காப்பாற்ற சமரசமாகப் போகுமாறு அச்சுதானந்தன் கோஷ்டிக்கு உபதேசித்துள்ளது. இதன் மூலம் விஜயனின் ஊழல் முறைகேடுகளை வெளிப்படையாக நியாயப்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பினாரயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மற்றும் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளதன் மூலம், இனி ஊழல் கறை படிந்தவர்களும் கட்சியில் தலைவராகலாம் என்ற புதிய மரபை சி.பி.எம். கட்சி உருவாக்கியுள்ளது. "ஊழலை ஒழிப்போம்!'' என்று இனி அக்கட்சி போராட்டம் நடத்தக்கூட அருகதை இழந்து விட்டது.

கட்சித் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அச்சுதானந்தன் தெரிவித்த போதிலும், அச்சு கோஷ்டியினர் பினாரயி விஜயனின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தி வருவதோடு, அவரது உருவப் படத்துக்கு ஆங்காங்கே செருப்பு மாலை போட்டுத் தொங்கவிடும் வேலையையும் செய்து வருகின்றனர். புழுத்து நாறும் இக்கோஷ்டிச் சண்டை நாடாளுமன்றத் தேர்தலின் போது நாய்ச் சண்டையாக முற்றும் என்பது நிச்சயமாகி விட்டது.

vs n dog

நாடாளுமன்ற சாக்கடையில் மூழ்கி ஓட்டுப் பொறுக்கி வந்த சி.பி.எம். கட்சி, இன்று ஊழல் முடைநாற்றம் வீசும் கட்சியாக புதிய பரிமாணத்தை எட்டிவிட்ட பிறகு, இனி அக்கட்சியைச் சீர்செய்து மாற்றியமைத்துவிட முடியாது. செங்கொடி காட்டி இன்னமும் ஏய்த்து வரும் அக்கட்சியை நாட்டு மக்களும் புரட்சியை நேசிக்கும் அக்கட்சி அணிகளும் புறக்கணித்து, தனிமைப்படுத்தி முடமாக்குவதைத் தவிர, இனி வேறு வழியும் கிடையாது.

புஜ மார்ச் 09

கேரளாவில் உள்ள மராத் எனும் சிறு கிராமத்தில் நடந்த மதக்கலவர படுகொலைகள் மீது ஜனவரி 15, 2009இல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுவாக, இந்து மதவெறி பாசிசக் கொடுமையிலிருந்து சிறுபான்மையினரைத் தாங்கள்தான் காப்பதாக சி.பி.எம். மற்றும் காங்கிரசு கட்சிகள் உருவாக்கி வந்த மாயையை, இந்த தீர்ப்பின் பின்னணி தகர்த்துள்ளது.

கேரளத்தின் கடற்கரையோர மீனவ கிராமமான மராத்தில், கடந்த 2002இன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு முஸ்லீம் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இந்து இளைஞருக்கும், அதனை தட்டிக்கேட்ட முஸ்லீம் இளைஞருக்கும் மோதல் உருவானது. இம்மோதல் பின்னர் மதக்கலவரமாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டது.

ஜனவரி 2002இல் நடந்த இந்த கலவரத்தில் இரு மதத்தையும் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில், முஸ்லீம்களின் வீடுகளும், சொத்துக்களும் சூறையாடப்பட்டன. கொல்லப்பட்டவர்களுக்காக சவக்குழி வெட்டிக் கொண்டிருந்த முஸ்லீம் பெரியவர் அபுபக்கர் என்பவரைக் கூட விட்டு வைக்காமல், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரசு அரசு நழுவிக் கொண்டது. தங்களுக்கு நீதி கிடைக்காத ஆத்திரத்தில், அபுபக்கரின் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் 8 பேரை மே மாதம் 2003இல் அபுபக்கரின் உறவினர்கள் படுகொலை செய்தனர். கொலையானவர்களில் புஷ்பராஜ் என்ற உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் தலைவர், அபுபக்கர் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்.

அபுபக்கரைக் கொன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, இம்முறை உடனடியாக நூறுக்கும் மேலான முஸ்லீம்களைக் கைது செய்தது. ஊடகங்களும், அரசும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு குறித்து மயிர் பிளக்க விவாதம் செய்தன. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த பா.ஜ.க. அமைச்சர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான பல விதமான பொய்ச் செய்திகளை அதிகாரப் பூர்வமாகவே பரப்பினர். இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துவதற்கு பதில், அவற்றுக்கு விளக்கம் கொடுத்து லாவணி பாடிக் கொண்டிருந்தன சி.பி.எம்.மும், காங்கிரசும்.

இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தாக்குதலின் காரணமாக, ஏறக்குறைய 500 முஸ்லீம் குடும்பங்கள் ஊரைக் காலி செய்து கொண்டு நிவாரண முகாம்களுக்கும், வேறு ஊர்களுக்கும் சென்றனர். காலியாய்க் கிடந்த முஸ்லீம்களின் வீடுகளை “மதச்சார்பற்ற’ காங்கிரசு அரசின் காவல்துறையினர் உதவியுடன் கொள்ளையடித்து சூறையாடினர் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள். அந்த பகுதியே முற்றிலுமாக ஆர்.எஸ்.எஸ்இன் ஆட்சிப் பிரதேசமாக மாறிவிட்டிருந்தது.

மராத் கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழைவதை ஆர்.எஸ்.எஸ் தடை செய்திருந்தது. அன்றைய முதலமைச்சர் காங்கிரசின் அந்தோணியே கூட இந்து பயங்கரவாதிகளின் நிபந்தனைகளின்படி நடந்து கொண்ட பின்னர்தான் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். அனைவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கொண்டிருந்தனர். கிராமத்திற்குள் மிகச் சுதந்திரமாக நுழைந்து வெறியேற்றிக் கொண்டிருந்தான், இந்து மதவெறி பயங்கரவாதியான பிரவீன் தொகாடியா.

1970களில் இருந்து இந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ் தனது “”ஷாகா”க்களை நடத்தி மதவெறியை ஊட்டி வளர்த்து வந்துள்ளது. 2002 மராத் கலவரத்திற்கு முன்னும், பின்னும் காங்கிரசும், சி.பி.எம்முமே கேரளாவை ஆண்டுள்ளன. ஆனால், இவர்கள் இந்து மதவெறியைத் தூண்டி கலவரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை ஒடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்ததில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களே மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்டனர்.

2002 மதக் கலவரத்தின் போது அரசு பாராமுகமாக நடந்து கொண்டதன் மூலம் கலவரத்தில் மிக முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. பயங்கரவாதிகளைக் காப்பாற்றியது. அந்தக் கலவரத்தின் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்டிருந்த 392 பேரில் 213 பேர் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்யைச் சேர்ந்தவர்கள். இவ்வழக்கு முற்றிலும் கிடப்பில் போடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் கூட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை. கைதுசெய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான இந்து பயங்கரவாதிகள் உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் முழுமூச்சில் மதவெறி பிரச்சாரத்தில் இறங்கினர். இன்று வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், 2003இல் கைது செய்யப்பட்ட 138 முஸ்லீம்களுக்கும் வழக்கம் போல பிணை மறுக்கப்பட்டது. அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

2002இல் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஆனால், 2003இல் நடந்த பழிவாங்கும் படுகொலையில், கொலை செய்யப்பட்ட இந்துவெறியர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும் வழங்கியது “மதச்சார்பற்ற’ காங்கிரசு அரசு. இதுவரை இந்தியாவில் நடந்த எந்த மதக் கலவரத்திலும் இந்தளவுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டதில்லை.

2002இல் நடந்த கலவரத்தின் போது உடனடியாக பெரிய அளவில் போலீசு படைகளை இறக்கி பாதுகாப்பை வழங்கிய அரசு, 2003இல் நடந்த படுகொலைக்குப் பிறகு அந்த பகுதியின் பாதுகாப்பை முற்றிலும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளிடம் விட்டது. 2003இல் நடந்த படுகொலைகளை, பழிவாங்கும் நடவடிக்கை என்று டி.ஜி.பி. கே.ஜெ.ஜோசப் கூறினார். ஆனால், அரசும், ஊடகங்களும் இந்த சம்பவத்தை மத அடிப்படைவாதிகளின் திட்டமிட்ட சதியாகச் சித்தரித்தன. சி.பி.எம். ஆட்சியின் போது வெளியிடப்பட்ட நீதிமன்ற விசாரணை அறிக்கை இதையே வாந்தியெடுத்திருந்தது.

அந்த அறிக்கையில், 2002இல் நடந்த கலவரத்திற்கும் 2003இல் நடந்த படுகொலைகளுக்கும் தொடர்பே இல்லாதது போல குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.க்கும் இந்த மதக் கலவரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என இந்த அறிக்கை கூறுகிறது. முஸ்லீம் அடிப்படைவாதிகள் மட்டும்தான் இவையனைத்திற்கும் காரணம் என்றும், அவர்கள்தான் மதவெறி பிரச்சாரம் செய்தனர் என்றும் குறிப்பிடும் அறிக்கை, மராத் கிராமம் முழுவதையும் இந்து மதவெறியூட்டி வைத்திருந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் பங்கை மறைத்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் இருப்பது குறித்தோ அல்லது போலீசு துணையுடன் முஸ்லீம்களின் வீடுகள், சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்தோ அறிக்கையில் மூச்சு கூட விடப்படவில்லை . மராத் பகுதியே இந்துத்துவ பயங்கரவாதிகளின் விடுதலைப் பிரதேசமாக இருப்பது குறித்தும் எதுவும் பேசப்படவில்லை . இதைத்தான் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டது “முற்போக்கு’, “மதச்சார்பற்ற’ சி.பி.எம். அரசு.

முஸ்லீம்களாக பிறந்த ஒரே பாவத்தைச் செய்த மராத் மீனவ மக்களின் மீதான இந்துத்துவ அரசு பயங்கரவாதம் இத்துடன் நிற்கவில்லை. 2003இல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வழக்கில் 67பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜனவரி 2009இல் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், 2002 கலவரம் குறித்த வழக்கோ இன்று வரை ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் நான்கு ஆண்டுகள் பிணை கிடைக்காமல் சிறையிலிருந்த 78 முஸ்லீம்கள் இன்று வாழ்க்கையைத் தொலைத்த விரக்தியில் பேசுகின்றனர். சிறையில் காவல்துறையின் சித்திரவதைகளினால் உடல் நைந்து துவண்டு போயுள்ளனர். அவர்களது குடும்பங்கள் காப்பாற்ற ஆளின்றி பஞ்சை பாராரிகளாக சீரழிந்துவிட்டன. அவர்களது வீடுகளும், மீன்பிடி படகுகளும் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. 2003க்குப் பிறகு மராத்துக்கு திரும்பிய முஸ்லீம் குடும்பங்களோ சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு யாதொரு நிவாரணம் வழங்கப்படவில்லை.

2003இல் மராத் சென்ற ஒரு நிருபரிடம் இந்துத்துவ பயங்கரவாதிகள் பின்வருமாறு கூறினர்: “”இங்கு இன்னொரு குஜராத்தை நடத்தினால்தான் முஸ்லீம்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள்.” அவ்வாறே, இன்னொரு குஜராத்தை கேரளாவில் நடத்திக் காட்டியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள். 2002இல் மோடி அரசு குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், இந்து பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாகவும் எப்படி செயல்பட்டதோ, அதே போலத்தான் கேரளாவில் சி.பி.எம். மற்றும் காங்கிரசு அரசுகளும் செயல்பட்டுள்ளன. கோத்ராவில் கொல்லப்பட்டவர்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே குஜராத் கலவரம் நடந்தது என்று சொன்ன குஜராத் அரசுக்கும், 2003இல் நடந்த படுகொலைகள் மதக் கலவரங்களை தூண்டும் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் சதி என்ற கேரள சி.பி.எம்.காங்கிரசு அரசுகளின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

புதிய ஜனநாயகம் ஜீலை 09