Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்’ Category

அன்பார்ந்த தோழர்களே!

ஏகாதிபத்தியமாக வளர்ந்து கொக்கரிக்கும், சர்வ வல்லமையும் பொருந்திய சர்வதேச பயங்கரவாத முதலாளித்துவம், மோசடியையும் சூதாட்டத்தையும் ‘வளர்ச்சி’ என்று சொல்லி உலகை வளைத்த முதலாளித்துவம், அதன் அகில உலகத் தலைமையகமான அமெரிக்க தெருக்களில் இன்று ஊதி அனைத்து வீசப்பட்ட துண்டு பீடியைப் போன்று நைந்து கிடக்கிறது. இதனைக் கொண்டாடும் பொருட்டும், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மேன்மேலும் எதிர்த்து வீழ்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!! என்கிற முழக்கத்தோடு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி, வருகிற ஜனவரி’25/2009 அன்று சென்னை-அம்பத்தூரில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்தவிருக்கிறது.

இதற்கான வேலைகளில் வீச்சாக ஈடுபட்டிருக்கும் எமது தோழர்களை வழிமறித்து தாக்குவதும், துண்டுப்பிரசுரங்களைப் பிடுங்கிக் கொளுத்துவதையும் “நக்சலைட்டுகள்….” பீதியூட்டியும் கேவலமாகக் கூப்பாடு போட்டு ஆட்காட்டி வேலை செய்து கொண்டிருக்கிறது போலிகம்யூனிச சி.பி.எம்.மும் அதன் பத்திரிக்கையுமான தீக்கதிரும்.

இந்த யோக்கியவான்களின் அரசியலை யாரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாதாம். ஜெயலலிதாவின் முந்தானைக்குள் புகுந்து கொண்டு வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ‘புரட்சி’ செய்யவிருக்கும் கேவலத்தை அவர்களது கட்சிக்குள் இருக்கும் நேர்மையானவர்கள் கேட்டாலே பாய்ந்து பிடுங்குவது போன்ற ‘ஜனநாயக’த்தைக் கடைபிடித்துவரும் அக்கும்பல் எமது தோழர்களை கொலைவெறியோடு தாக்குவதும், “ஆயுதப்பயிற்சி செய்கிறார்கள்….” என்று பிதற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது, ஒன்றும் ஆச்சர்யமானதல்ல.இந்தியாவின் போலிஜனநாயகத்தையே உச்சிமுகர்ந்து பாராட்டிப் போற்றி வழிபடும் ‘காமரேடுகள்’ அவர்களது கட்சிக்குள் மட்டும் என்ன உண்மையான ஜனநாயகத்தையா வைத்திருக்க முடியும்?

அவர்களின் கேவலமான பிழைப்புவாத அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் நபர் யாராக இருந்தாலும் ‘நக்சலைட்’ பட்டம் வழங்கி கவுரவிக்கும் காமரேடுகள், நம்மை விடக் கூர்மையாக, நம்மைவிட நேரடியாக அப்பிழைப்புவாத முகாமைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சியல்ல அது(சி.பி.எம்.) கந்துவட்டிக் கூடாரம் மட்டுமேஎன்று அக்கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய, திருநெல்வேலி மாநகரக் கட்சியின் செயலாளராக இருந்த கனகசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரையும் ’நக்சலைட்’ என்று தமது வழக்கமான முத்திரையைக் குத்தமுடியாது? ஏனென்றால் அவர் சிபிஎம் என்கிற கழிசடையின் மீது மேற்கண்டபடி விமர்சனம் வைத்துவிட்டு சரத்குமார் என்கிற கூவத்தோடு சங்கமித்திருக்கிறார்.

திருநெல்வேலி கனகசாமி முதல் சென்னை கே.கே.நகர் கட்டைப்பஞ்சாயத்து புகழ் காமராசு வரை சரத்குமாரிடமும் விஜய்காந்திடமும் சென்றடைவதற்கான காரணத்தை நாம் ஆராயவேண்டிய அவசியமில்லை, போலிகம்யூனிசக் கட்சியின் அடிப்படை எதார்த்தமே அதில்தான் இருக்கிறது. ஆனால், கனகசாமி அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ருவரின் மீது வைத்திருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் இப்போது குமுதம் ரிப்போர்ட்டர் 1.1.2009 இதழில் வெளியாகியுள்ளதை நாம் கண்டிப்பாக ஆராய வேண்டியுள்ளது. சிபிஎம் என்கிற ‘புனிதமான’ சாக்கடையின் குமட்டலெடுக்கும் கேவலங்களை இதனைப் படிக்கின்ற தோழர்கள் சகித்துக் கொண்டு தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திருநெல்வேலி கனகசாமி வைக்கின்ற குற்றச்சாடு பலவாக இருந்தாலும் அதில் மையமான, சாரமான, கவனிக்க வேண்டிய குற்றச்சாட்டு மூன்று. அக்கட்சியின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் பலர் வெளிப்படையாகவே கந்துவட்டி, மீட்டர்வட்டி போன்ற ரத்தம்குடிக்கும் தொழிலைச் செய்துவருவதையும் அதன் பொருட்டு நடைபெறும் கட்டைப் பஞ்சாயத்துகளுக்கு மையமாக அக்கட்சியின் அலுவலகங்கள் பயன்படுத்தப்படுவதையும் முதலாவதாகக் கொள்வோம். இரண்டாவதாக, அக்கட்சியில் சாதிப் பாகுபாடு, தேவர் ஆதிக்க சாதிவெறியும் வெளிப்படையாக இருப்பதாகவும் சொல்கிறார். மூன்றாவது குற்றச் சாட்டுதான் மேற்கண்ட இரண்டையும் விட அதிகம் குமட்டலெடுக்கும் வகையில் இருக்கிறது. அது, மாநில அளவிலான தலைவர்கள் அதே கட்சியினைச் சேர்ந்த மாதர் சங்கத்தைச் சார்ந்த பெண்களுடன் கட்சி அலுவலகத்தையே லாட்ஜாக மாற்றிக் கொண்டு பாலியல் உறவுகொள்வதாகவும் சொல்லியிருப்பது.

இதனை அவரது வார்த்தையிலேயே கேட்போம். பொதுவாக சமூக விரோதிகள், பெருநிலக் கிழார்கள், குடிகாரர்கள், கந்துவட்டிக் காரர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பது விதி. ‘நாளை எண்ணி வட்டி சேர்க்கும் நாய்களுக்கு இங்கு இடமில்லை’ என்று நாங்கள் பாட்டுப்பாடியே கட்சி வளர்த்தோம். ஆனால், நெல்லையிலோ நிலைமை தலைகீழ். கட்சியின் உயர்பதவியான மாநிலக் குழு உறுப்பினர் கருமலையான் தலைமையில் ஒரு கந்துவட்டிக் குழுவே இருக்கிறது. இவர்களுக்கென உள்ள ஓர் ஏஜெண்ட் இவர்களது பணத்தை பத்து சதவிகிதத்திற்கு வட்டிக்கு விட்டு ஐந்து சதவிகிதத்தை இவர்களுக்குக் கொடுக்கிறார். குழந்தைவேலு என்கிற தீக்கதிர் ஏஜெண்ட், பல லட்ச ரூபாயை வட்டிக்கு விட்டுவிட்டு அந்தப் பணத்தைக் காப்பாற்றவே கட்சிக்கு வந்தவர். இதெல்லாம் பற்றி மாவட்டச் செயலாளர் பழநியிடம் சொன்னால் ‘அது மாற்றுப் பொருளாதார ஏற்பாடுதானே?’ என்று அவர் அலட்சியமாகச் சொல்லி வந்தார்….”

”இந்த கனகசாமி, சிபிஎம் கட்சியை விட்டு வெளியேறியதை நியாயப்படுத்துவதற்காகவே இப்படி இட்டுக்கட்டி சொல்லியிருக்கிறார்”, என்று கூட இப்பதிவினைப் படித்தபிறகு வெட்கம் சிறிதுமின்றி அவர்களது தீக்கதிர் எழுத வாய்ப்பிருக்கிறது. ஆனால், கருணாநிதியிடமிருந்து வெளியேறி ஜெயாமாமியின் முந்தானைக்குள் தமது அரசியலை முடிந்து வைப்பதற்காக இவர்கள் பேசியும், எழுதியும் வரும் காரணங்களில் இருக்கின்ற வெளிப்படையான போலித்தனம் எதுவும் திருநெல்வேலி கனகசாமியின் வார்த்தைகளில் இல்லை. இதனை நான் சொல்ல வில்லை, கனகசாமி யார்மீது குற்றச்சாட்டு வைத்தாரோ அந்த கருமலையானின் பதிலைப் படித்தாலே அந்த குற்றச்சாட்டுக்களில் உள்ள உண்மை தெரிகிறது.

“கனகசாமி ஒரு அப்பாவி. சூதுவாது தெரியாதவர். பொருளாதாரச் சிக்கல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால், கட்சியிலுள்ள பெண்களைப்பற்றி அவர் தவறான சில கருத்துக்களைச் சொல்லியிருப்பதுதான் நெருடுகிறது. சில தோழர்கள் சில பெண்களைக் காதலிப்பது எங்களுக்கும் தெரியும். வரம்பு மீறக் கூடாது என்று அவர்களை எச்சரித்து அவர்கள் வீடுகளில் பேசி திருமண ஏற்பாடுகளைச் செய்தும் வருகிறோம். அதைத்தான் கனகசாமி தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன்.

கந்து வட்டியைப் பொறுத்தவரை அது மாவட்ட மாநாடுகளில் எழுப்பப்பட்ட பிரச்சினைதான். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தக்கம். பணத்தை வட்டிக்கு விடுவதை எப்படி மறைக்க முடியும்? பூனைக்குட்டி வெளியே வந்துவிடாதா? கட்சியில் சாதியிசம் இருப்பதாகச் சொல்வது மிகவும் தவறு. கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள நாடார் மற்றும் தலித்துகளின் பட்டியலை உங்களுக்கு நான் தரத் தயார். தோழர் கனகசாமி ஏன் இப்படியெல்லாம் சேற்றை வாரி இறைக்கிறார் என்பது எனக்குப் புரியவே இல்லை” என்று கருமலையான் சோகமே உருவாகச் சொல்லி முடித்திருக்கிறார். இந்த மானங்கெட்ட பதில்கள் மேற்கண்ட கனகசாமியின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இல்லாமல் அதனை மேன்மேலும் வலுப்படுத்துவதாகத்தானே இருக்கிறது?

பிழைப்புவாதத்திலிருந்து பாசிசத்திற்கு சீரழிந்து கொண்டிருக்கும் சி.பி.எம். கட்சியில் இன்னும் கொள்கை என்று ஏதாவது மிச்சமிருக்கமுடியுமா? சக ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளைவிடக் கேவலமாக மக்கள் மத்தியில் அவமானப்பட்டு வரும் அக்கட்சியினை ”உட்கட்சி போராட்டம் நடத்தி மீட்டெடுத்து விடுவேன்” என்று உறுதியாக நம்பும் தோழர்கள், தாம் இவ்வாறு நம்புவதற்கான நேர்மையான காரணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டுங்கள் பார்க்கலாம். இவ்வளவு அம்பலப்பட்ட பிறகும் அக்கட்சியில் உங்களை ஒட்டிக் கொண்டிருக்க வைத்திருக்கும் அவலம் என்னவாக இருக்கலாம், அது வேறொன்றுமில்லை தமது கட்சியின் நேர்மையான அணிகளை அரசியல் படுத்தாமல் ‘பாதுகாப்பாக’ வைத்திருப்பதில்தான் சிபிஎம் கட்சியின் உயிர் இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமே நிதர்சனமாக இருக்கிறது.

தோழமையுடன்,
ஏகலைவன்.
yekalaivan@gmail.com

படங்கள் குமுதம் ரிப்போர்ட்டர் 01.01.2009 இதழிலிருந்து பதியப்பட்டது.

Read Full Post »